

மதுரை: புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரையில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்தவர் சாலமன் பாப்பையா. மதுரையில் 1936-ம் ஆண்டு பிப். 22-ம் தேதி பிறந்தார். இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2025-ம் ஆண்டு இவர் காலமானார்.
மில் தொழிலாளி சுந்தரத்துக்கு மகனாகப் பிறந்த சாலமன் பாப்பையா, ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பள்ளியில் படித்து தியாகராசர் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்து, அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, தான் கற்ற தமிழை உலகமெல்லாம் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி தனது 90-வது வயதில் நேற்று பிற்பகலில் காலமானார். இவருக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர்.
சாலமன் பாப்பையா பட்டிமன்ற நடுவராக பணியாற்றுவதற்கு முன்பு, பட்டிமன்றங்கள் மக்களுடைய பொழுதுப்போக்கு நிகழ்வாக மட்டுமே பார்க்கப்பட்டது.
இவர் நடுவராக பணியாற்ற தொடங்கிய காலத்துக்குப் பிறகே பட்டிமன்றங்கள், மக்களுடைய அறிவு தளமாக மாறத் தொடங்கியது. பட்டிமன்றங்களில் தமிழ் இலக்கியங்களுக்கும், இதிகாசங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசி வந்த சூழலில், சாமானிய மக்களின் வாழ்க்கையை பேசியவர் சாலமன் பாப்பையா.
அதன்பிறகு, பட்டிமன்றங்கள் என்றாலே, அது சாலமன் பாப்பையாவின் முகமாக மாறியது. முற்போக்கு கருத்துகளை மக்களுடைய கிராமத்து மொழி நடையில் நகைச்சுவையாக பேசி, மிகப்பெரிய சமூக மாற்றங்கள் ஏற்பட விதையாக இருந்தவர். சமூகத்திலும், அன்றாடம் வீடுகளிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை பட்டிமன்றங்களில் ஆழமான சமூக கருத்துகளைத் தன்னுடைய பேச்சாற்றலால் நகைச்சுவையுடன் சொல்லி, மக்கள் மனங்களை கவர்ந்தவர்.
பல்லாயிரம் பட்டிமன்றங்கள் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தொலைக்காட்சிகள் மட்டும் பிரபலமாக இருந்த காலத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அவரது பட்டிமன்றம் இல்லாமல் நிகழ்ச்சிகள் இருக்காது. அந்தளவுக்கு பட்டமன்ற நடுவர்களில் புகழின் உச்சத்தில் இருந்தவர்.
தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும், 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பாரதியார் மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், பாரதியார் நினைவு நாளிலேயே நேற்று (செப்.11) காலமானது குறிப்பிடத்தக்கது.
மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடலுக்கு பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்ட திரளானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.