

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றபோது...
சாலமன் பாப்பையா பல துறைகளில் சாதனை படைத்தவர் என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு தாங்க முடியாத துயரத்தை தமிழ் சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறது. சாலமன் பாப்பையா மேடையில் பேசும்போது என் தந்தையாருடன் சிறு பையனாக தரையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். நடுவராக பல மேடைகளில் பார்த்திருக்கிறேன்.
அமெரிக்கன் கல்லூரியில் ஒருமுறை அனைத்து கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. அந்த போட்டியில் நான் அவரிடம் 2-ம் பரிசு பெற்றேன். பிறகு அவரது பட்டிமன்றத்திலேயே பேசியிருக்கிறேன்.
ஒருமுறை மதுரை தமிழ்ச்சங்கத்தில் கமலாம்பாள் சரித்திரம் பற்றி தனிச் சொற்பொழிவாற்றினார். அதில் வரும் தமிழாசிரியரான ஆடுசாபட்டிஅம்மையப்ப பிள்ளையை பற்றி பேசும்போது, நான் வியந்துபோனேன். 2003-ம் ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பான ‘பெட்னா’ அவரை அமெரிக்காவுக்கு அழைத்துபோது, நானும் சென்றிருக்கிறேன்.
அவர் பேச்சாளர் மட்டுமல்ல, எழுத்தாளரும் கூட. அவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். அதில் அட்டைப் படத்துக்கு அவரே ஓவியமாக வரைந்திருக்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். புறநானூறுக்கு உரை எழுதியிருக்கிறார். பலதுறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார். மதுரை கம்பன் கழகத்தை தோற்றுவித்த வரும் அவர் தான். அவருக்கு அரசு மரியாதை செய்தால் அது தமிழுக்கே செய்த பெருமையாகும்” என்றார்.