

விஜயகுமரன், வி.ஜி.கணேசன், மாபா.பாண்டியராஜன்
விருதுநகர்: விருதுநகர் தொகுதியைக் குறிவைத்து திட்டமிட்டுப் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர், அவைத் தலைவர் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பில் சிவகாசி தொழிலதிபர் களமிறக்கப்பட்டுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருதுநகர் தொகுதியில் அதிமுகவினரிடயே கடும் போட்டி நிலவியது. மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் மாபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்த பிறகு தனக்கு சால்வை அணிவித்தவரை ராஜேந்திரபாலாஜி தாக்கினார்.
இது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து கட்சியில் பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படியும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று விருதுநகரில் மாபா.பாண்டியராஜன் சொந்தமாக வீடு கட்டிக் குடியேறினார். பின்னர் அந்த வாய்ப்பும் கைநழுவியது.
தொடர்ந்து, விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாபா.பாண்டியராஜன் புறக்கணிக்கப்பட்டதால் வெறுப்படைந்த அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் விருதுநகரை கேட்டுப் பெறுவேன் என்றும் அதுவரை விருதுநகருக்கு வரமாட்டேன் என்றும் உறுதியேற்றிருந்தார்.
இதையடுத்து கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார். இந்த முறை எப்படியும் மாபா. பாண்டியராஜனுக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையில் இருந்தனர்.
மாபா.பாண்டியராஜனுக்கு எதிராக விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரனையும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி களம் இறக்கினார்.
அவர் கொடுத்த நம்பிக்கையில் விருப்ப மனுவையும் விஜயகுமரன் தாக்கல் செய்து தனக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். விருதுநகரில் அதிமுகவினரும் இதே எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
இந்நிலையில், சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமை யாளரும் தொழிலதிபருமான வி.ஜி.கணேசன் விருதுநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், அவைத் தலைவர் விஜயகுமரன் ஆதரவு கட்சி நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர்.