

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பட்டியலில் இருந்த 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சுகபுத்ரா இன்று வெளியிட்டார்.
ராஜபாளையம் தொகுதியில் 2,01,901 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 2,13,665 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2,18,801 வாக்காளர்களும், சிவகாசி தொகுதியில் 2,14,544 வாக்காளர்களும், விருதுநகர் தொகுதியில் 1,90,824 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,98,996 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 1,97,790 வாக்காளர்களும் உள்ளனர்.
ஏற்கெனவே இருந்த வாக்காளர் பட்டியிலில் இருந்து ராஜபாளையம் தொகுதியில் 29,256 பேர், ஸ்ரீவில்லிபுத்தூரில் 30,087 பேர், சாத்தூரில் 22,273 பேரும், சிவகாசியில் 29,238 பேர், விருதுநகரில் 35,316 பேர், அருப்புக்கோட்டையில் 23,252 பேர், திருச்சுழியில் 20,542 பேர் என மொத்தம் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், இறந்தவர்கள் - 73,279, முகவரி இல்லாதவர்கள் - 10,722, குடிபெயர்ந்தோர் - 95,609, இரட்டை பதிவுகள் - 10,135, இதர காரணங்களுக்காக 219 பேர் என மொத்தம் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1,901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்க தற்போது 1,999 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விவரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.