

சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை, மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 10-ம் தேதி தனது பணியை தொடங்கிய இந்தப் படையின் மூலம் இதுவரை 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரப்பெற்ற 346 புகார்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போன 6 பெண்கள் மற்றும் 14 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அறிவுசார் குறைபாடுடைய 14 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், ஒரு குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளியிலிருந்து நின்ற 51 குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9,397 முக்கிய இடங்களில் தீவிரரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், ஜூன் 10-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை ஒன்றரை மாத காலத்தில் மொத்தம் 2,032 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இதுவரை காணாமல்போன 96 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 22 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 169 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 57 அறிவுசார் குறைபாடுடைய நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட 58,346 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.