எஸ்.ஐ. தேர்வு முடிவை 10 நாட்கள் நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

தமிழில் ஒரு வினாகூட கேட்கவில்லை என்றால் எப்படி?
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: தமிழில் ஒரு வினாகூட கேட்கவில்லை என்றால் எப்படி என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவை 10 நாட்களுக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வில், பிரிவு பி பாடத் திட்டத்தில் தமிழ் வினாக்கள் இல்லை. அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன.

இதனால் பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. எனவே, எஸ்.ஐ. தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதுடன், மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் “சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, “தேர்வுக்கான பாடத் திட்டத்தை வழங்கி, அதிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இந்த தேர்வில் 10 வினாக்கள் தமிழில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 5 வினாக்களாவது கேட்டிருக்கலாம். தேர்வர்கள் பாடத் திட்டத்துக்காக தங்களது நேரத்தை செலவு செய்து தயார் செய்யும் நிலையில், தமிழக அரசு ஒரு வினாகூட தமிழில் கேட்கவில்லை என்றால் எப்படி?” என்றார்.

அதற்கு அரசுத் தரப்பில், “பாடத் திட்டத்தில் உள்ள அனைத்தில் இருந்தும் வினாக்களை கேட்க வேண்டும் என்றால் எப்படி? பாடத் திட்டத்தை தாண்டி வினாக்கள் கேட்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி, “தமிழ் மொழியில் பயின்றோருக்கு ஒரு மதிப்பெண்கூட அவர்களின் நிலையை மாற்றலாம் அல்லவா? இருதரப்பும் தங்களது பதில்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம். தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Santhanakoodu Festival
‘மக்கள் போராளி நல்லகண்ணு’ - தலைவர்கள் புகழஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in