

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் ஆபிரகாமை அழைத்து வரும் போலீஸார். படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி: பைபிள் வகுப்பு நடத்துவதாகக் கூறி 4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கிறிஸ்தவ மத போதகருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 4 தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தேவர் குளத்தை அடுத்தமேல இலந்தகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). கிறிஸ்தவ மத போதகரான இவர், அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபையில் பணியாற்றி வந்தார். மேலும், தனது வீட்டுக்குச் சிறுமிகளை வரவழைத்து, அவர்களுக்குப் பைபிள் வகுப்பு நடத்தி வந்தார். வெளியூர்களில் நடைபெறும் சபை ஊழிய நிகழ்ச்சிகளுக்கு, அந்த சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பைபிள் வகுப்பு மற்றும் ஊழிய நிகழ்ச்சிகளுக்காக அழைத்து செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகளை, தனது வீட்டில் அடைத்து வைத்து ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய், திருநெல்வேலி ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், மகளிர் காவல் ஆய்வாளர் ராதா உள்ளிட்ட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் சாட்சிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்றது. இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
கடும் தண்டனை: மத போதகராகவும் சிறுமிகளின் தந்தை வயதுடையவராகவும் இருந்து கொண்டு, சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்து குற்றம் இழைத்துள்ளதால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். நான்கு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக் காக ஆபிரகாமுக்கு 4 தூக்கு தண்டனையும் ரூ.52 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 17 போக்சோ வழக்குகளில் 17 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் 2 பேருக்கு தூக்கு தண்டனையும் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் கருத்து: திருநெல்வேலியைச் சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் கே.பிரபாகரன் கூறியதாவது: கொலை வழக்குகளில் இரட்டை ஆயுள், மூன்று ஆயுள் சிறை தண்டனைகள் வழங்கப்படுவது போல், இந்த வழக்கில் 4 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால், ஒவ்வொரு சிறுமியின் பாதிப்புக்கும் ஒரு மரண தண்டனை என்று கணக்கிட்டு நீதிபதி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், பாலியல் குற்றத்துக்கும், கொலைக்கும் என தலா ஒரு மரண தண்டனை வீதம் 2 மரண தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த ஆண்டு தீர்ப்பு கூறியிருந்தது.
இதுபோல், கடந்த 2020-ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் தலா ஒரு மரண தண்டனை வீதம் இரட்டை மரண தண்டனையை, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் விதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மயங்கி விழுந்த ஆபிரகாம்: நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் ஆபிரகாம் மயங்கி விழுந்தார். உடனே, நீதிமன்ற வளாகத்தில் இருந்த செவிலியர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தீர்ப்பையொட்டி ஆபிரகாமின் மனைவி, மகள் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். அவர்களை அங்கிருந்த போலீஸார் வெளியே அழைத்துச் சென்றனர்.