“பதில் சொல்லத் தெரியாமல் திணறல்...” - அமைச்சர் நிர்மல் குமார் மீது செந்தில் பாலாஜி சாடல்

“பதில் சொல்லத் தெரியாமல் திணறல்...” - அமைச்சர் நிர்மல் குமார் மீது செந்தில் பாலாஜி சாடல்
Updated on
2 min read

சென்னை: “எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க திராணி இல்லாமல் குதர்க்கமாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை அமைச்சர் பதில் சொல்லவே இல்லை” என்று அமைச்சர் நிர்மல் குமாரை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடினார்.

சென்னை - ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தவெக அரசு அமைந்த பிறகு, ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்குப் பதிவு செய்வதில்தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல, 10 வழக்குகள் அல்ல, எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒரு சட்டமன்றத்தின் நிகழ்வு என்பது ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். நாட்டின் நிலைகளை குறித்து சட்டமன்றம் நடைபெறுகின்ற பொழுது உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும், அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதும், முதல்வர் பதில் சொல்வதும் இதுவரை இருந்த ஒரு நடைமுறை.

ஆனால், இன்றைய தவெக அமைச்சர்கள், எதிர்கட்சிகள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், பதில் தெரியாமல் வேறு விதமாக அவர்கள் அந்த பதில்களை சொல்லி, அந்த இடத்தில் ஒரு கூச்சல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.

நான் நேற்று என்ன கேட்டேன்.  மின்சாரத் துறை அமைச்சரிடம் ‘18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு, கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க, மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது, உரிய விளக்கம் என்ன?’ என கேள்வி கேட்டால், அது குறித்து கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லவில்லை.

திரும்பவும் ஒரு கேள்வி கேட்டேன். ‘நீங்க வெள்ளை அறிக்கையில திமுக ஆட்சியில எங்களுடைய முதல்வராக இருந்தவர் முன்னெடுத்த திட்டங்களை வெள்ளை அறிக்கையிலே சுட்டி காட்டி இருக்கறீங்க. 99,000 மின்மாற்றிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. புதிதாக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2020-21-ல ரூ.14,500 கோடியாக இருந்த மின்வாரியத்தின் ஓராண்டு கடன், கடந்த 2025-26-ல ரூ.933 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையிலே சொல்லி இருக்கீங்க.

ஆக, முழுசா வெள்ளை அறிக்கையில திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சொல்லிவிட்டு நேற்று சட்டமன்றத்தில் வந்து திமுக ஆட்சியில் எந்தவிதமான பணிகளும் நடக்கலை என்கிறது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாங்க.  நான் அதைத்தான் கேள்வியா கேட்டேன். நீங்களே வெள்ளை அறிக்கையிலே சொல்லிருக்கீங்கன்னு இப்ப அதுக்கு பதில் சொல்லணும். அதற்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதை விட்டுவிட்டு வேறு விதமான வார்த்தைகளை பயன்படுத்துவது, இதுபோன்ற நிகழ்வுகளை சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் முன்னெடுக்கின்றார்கள்.

ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள்.

ஒரு முதல்வர் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணம் என்னங்கிறது என்ன? யார்கிட்டயும் எதுவும் மறைக்க மாட்டேன். உண்மையா நேர்மையா நடந்துக்கிறன் தானே அவருடைய உறுதிமொழியில பதவியே ஏற்று இருக்கார். அப்ப, கையில இருந்தா நீங்க வெளியிட வேண்டியதுதானே?

எந்த துறையில் தவறு நடந்தது, எவ்வாறான தவறு நடந்தது, யார் தவறு செய்தார்கள், அவர்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்கிறோம். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?  இதுல என்ன நேரம் காலம் ஜோசியம் பார்த்து நேரம் காலங்கம் பார்த்தா அத வெளியிட முடியும்? அதான் எங்களுடைய எதிர்கட்சித் தலைவர் மிக தெளிவாக சொன்னார்.  அப்படி ஏதேனும் உங்களிடம் இருந்தால் வெளியிடுங்கள் என்று நேற்று கேட்டார். இப்ப வரைக்கும் அவங்க வெளியிடலை.

மூணு ஃபைல் கட்டி வச்சிருக்கு, முடிச்சு போட்டு வச்சிருக்கு, அந்த ஃபைல அவுத்தாருனா வெளியில வந்துரும்னு சொன்னவங்க, 24 மணி நேரம் ஆச்சு. நேற்றே அதை வெளியிட வேண்டியதுதான? அவங்ககிட்ட இருந்தாதானே வெளியிட முடியும்? இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு. மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது” என்றார்.

“பதில் சொல்லத் தெரியாமல் திணறல்...” - அமைச்சர் நிர்மல் குமார் மீது செந்தில் பாலாஜி சாடல்
அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in