

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் செஞ்சி கே.கதிரவனும், துணைத்தலைவராக வழக்கறிஞர் இ.பாலமுருகனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது.
இத்தேர்தலில் மொத்தம் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர். இதில் முன்னுரிமை வாக்குகள் அடிப்படையில் 23 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி, உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய பயிற்சியாளரும், வழக்கறிஞருமான சுதர்ஷனா சுந்தர் ஆகிய இருவரை நியமன உறுப்பினர்களாக நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான புதிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சிலுக்கான உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (செப்.16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக வழக்கறிஞர் செஞ்சி கே.கதிரவனும், துணைத் தலைவராக வழக்கறிஞர் இ.பாலமுருகனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளரான அசோக்குமார் பாண்டே நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் வெற்றி பெற்ற பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.