

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணையை கண்காணிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை கண்காணிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதன் நகலை காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி, ‘மனுதாரர் பரந்தாமனை விசாரித்தீர்களா?’ என காவல் துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞரும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், ‘பரந்தாமனுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அடுத்த வாரம் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்’ என தெரிவித்தனர்.
இதையடுத்து, நூலகங்களுக்கு 1,645 ரூபாய் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள பல புத்தகங்கள் குப்பைகள் போல் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கடந்த 20 ஆண்டுகள் நடந்த புத்தக கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநராக உள்ள ஜி.வெங்கட்ராமனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை திரட்டியுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து, அது குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு தன்னுடைய கருத்துகளை தெரிவிக்கவும் ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அறிவுறுத்தினார்.
வெங்கட்ராமன் தனது முதல் அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.