

செங்கோட்டையன்
“தோல்வி பயத்தால் தான்தவெக-வை அதிமுக விமர்சனம் செய்கிறது” என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது: தவெக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற நோக்கம், புதியதாக வாக்களிக்கக்கூடிய ஒவ்வொருவரின் எண்ணத்திலும் உள்ளது. 35 வயதுக்கு கீழ் உள்ள அனைவரது ஒருமித்த கருத்தாகவும் அது பிரதிபலிக்கிறது. வெற்றி என்பது மக்கள் சக்தி. அதை யாராலும் தடுக்க இயலாது.
விஜய் தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக வருவார். 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார். அதிமுக நேரடியாக தவெக-வை விமர்சிக்க தொடங்கியிருப்பது, தோல்வி பயத்தால் தான். அவர்கள் என்ன கருத்து வேண்டு மானாலும் சொல்லட்டும். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால் தான், இவ்வாறான கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுக-வின் தேர்தல் அறிக்கையை பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுப்பதே, அதிமுக-வின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.