

செங்கோட்டையன்
சென்னை: “அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயத்தில் தினமும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்” என தவெக நிர்வாகி செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டார்கள். இரண்டு இயக்கங்களும் இந்த நாட்டை ஆள வேண்டுமா என மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். பல கோடி வருவாயை இழந்தபோதிலும், மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார் விஜய். தவெக தலைவர் விஜய்யை பார்த்து, எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. அதனால் தான் அனைவரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நேற்று பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றேன். அப்போது, குழந்தைகள் தங்களது பெற்றோரை தவெகவுக்கு வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்துவதாக சொன்னார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதல்வராக வருவார்.
234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். புதிதாக வாக்களிக்க இருப்பவர்கள் விஜய் நாட்டை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள். இது தான் அவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயத்தில் தினமும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக வெளியிடப்பட வேண்டியது. தினமும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள் என்றால் எவ்வளவு தோல்வி பயம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.