

செங்கோட்டையன்
விஜயமங்கலத்தில் க்யூ ஆர் கோடு இல்லாமல் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் கூட்டத்துக்கு வரலாம் என தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி விஜயமங்கலம் வரும்போது காவல்துறை என்னென்ன வேண்டுகோள் வைத்தார்களோ அதைவிட கூடுதலாக பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகள் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
பாதுகாப்பு அடிப்படையில் 40 கேமராக்கள் பொருத்தப்படும். அவசர தேவைக்காக 40 வாக்கி-டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் இடம் பெறுவார்கள். 20 சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பப்படும்.
அத்தனை பேருக்கும் பாட்டில்களில் குடிநீர் வழங்கப்படும். 20 இடங்களில் கழிப்பறை வசதியும், 3 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். க்யூ ஆர் கோடு இல்லாமல் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு அனைவரும் வரலாம். விஜயை பார்த்து விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம். கூட்டம் முடிந்த பின்னர் வெளியேற 14 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.