“செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” - அதிமுக மூத்த தலைவர் செம்மலை விமர்சனம்

“செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” - அதிமுக மூத்த தலைவர் செம்மலை விமர்சனம்
Updated on
1 min read

“செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது” என அதிமுக மூத்த தலைவர் செம்மலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் இது போன்ற முயற்சியை எடுத்தவர்தான்.

தாயை பழித்தவனும், தலைமையை மதிக்காதவனும் ஒன்றே. எங்கள் பொதுச்செயலாளரை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அவசரப்படவில்லை. மிகவும் பொறுமை காத்தார். செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க இவர், விஜய்க்கு அரசியல் சொல்லித் தர சென்றிருக்கிறாரா என்று தெரியவில்லை. காரணம், நதிகள் கடலில் கலப்பது இயற்கை. கடல்நீர் நதியில் சென்று கலப்பது காலம் செய்த பாவம். இவரது நடவடிக்கை தற்கொலைக்கு சமம் என்றுதான் நான் கருதுகிறேன். ஒருவன் தற்கொலை செய்ய முடிவு செய்துவிட்டால் அவனை என்ன காவல் காத்தாலும் காப்பாற்ற முடியாது.

வளர்ந்த கட்சியில் அனுபவித்துவிட்டு, இன்னொரு புதிய கட்சியை நான் வளர்க்கப் போகிறேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இளவயதுக் காரர்கள். கிட்டத்தட்ட வாக்குரிமை இல்லாதவர்கள்தான் அதில் அதிகமாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களோடு வயது முதிர்ந்த மூத்த அரசியல்வாதி ஒன்றிணையவே முடியாது.

எங்களுடன் அவர் இணைந்து பயணித்த அரசியல் வேறு, அங்கு போய் சிறுவயதுக்காரர்களோடு இணைந்து பழகி புதிதாக கட்சியை வளர்த்து, ஊர் ஊராக சென்று கொடியேற்றி ஆட்சியை பிடிப்பேன் என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது” இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.

முன்னதாக இன்று, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

“செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” - அதிமுக மூத்த தலைவர் செம்மலை விமர்சனம்
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in