

சென்னை: விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தி பேசியதாக ஏதேனும் புகைப்படம் வந்துள்ளதா? என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, வெள்ளிக்கிழமை விஜய்யை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்புயுள்ளது. சமீபத்தில், காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிவிட்டு வந்த நிலையில், பிரவீனின் இந்த நகர்வானது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது: விஜய் - பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு குறித்து எனக்குத் தெரியாது. திமுகவுடன பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். விஜய்யை சந்திக்க பிரவின் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை. இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது, இரும்புக் கோட்டை போன்று உள்ளது. இண்டியா கூட்டணியை சிதைக்க முடியாது.
எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்று சந்தித்தற்கு ஏதேனும் புகைப்படங்கள் இருக்கிறதா?. அப்படி அவர் சந்தித்திருந்தால், அகில இந்திய தலைமை அதுகுறித்து முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார்.