காயிதேமில்லத் நினைவிடத்தில் திமுக - காங். தொண்டர்கள் வாக்குவாதம்: செல்வப்பெருந்தகை விளக்கம்

காயிதேமில்லத் நினைவிடத்தில் திமுக - காங். தொண்டர்கள் வாக்குவாதம்: செல்வப்பெருந்தகை விளக்கம்
Updated on
1 min read

சென்னை: “நீண்டகால கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் சங்கடம் இருக்கத்தான் செய்யும்,” என்று காயிதேமில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மூண்ட வாக்குவாதம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

காயிதே மில்லத்தின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அவர்களை, தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்த நினைவிடம் அருகே வந்த போது, திமுக - காங்கிரஸ் ஆதரவாளர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதன்படி, ”வருகிற ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணியின் மாநாட்டில் திமுக கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு, ”அது திமுக விருப்பம், அக்கட்சியின் முடிவு. அதில் எனக்கு கருத்து கூற முடியாது” என்று கூறினார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு, ”காயிதே மில்லத்தின் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும் இடத்தில் ஏற்பட்டது வெறும் குழப்பமே. இந்த விவகாரத்தை மேலும் கூர்மைப்படுத்த விரும்பவில்லை. நீண்ட கால கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் சங்கடம் இருக்கத்தான் செய்யும்” என்றார்.

இண்டியா கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ள நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்குமா ? என்ற கேள்விக்கு, இதனை “அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்யும், தமிழக குழு இதில் முடிவு எடுக்க முடியாது,” என்று செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.

காயிதேமில்லத் நினைவிடத்தில் திமுக - காங். தொண்டர்கள் வாக்குவாதம்: செல்வப்பெருந்தகை விளக்கம்
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” - நாராயணசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in