சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன் மூலம் அங்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த உத்தியைப் பயன்படுத்தி தமிழகத்திலும் முறைகேடுகளில் ஈடுபட பாஜக திட்டமிட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பைப் பயன்படுத்தி 41 தொகுதிகளை குறிவைத்து பாஜக செயல்படுகிறது.
இந்திய குடிமகன் என்று நிரூபித்து வாக்காளராக சேர்க்க 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டுமென்று ஏற்கெனவே கூறப்பட்டது.
தற்போது 13-வது ஆவணமாக, பிஹார் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், தமிழகத்தில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அந்தஆவணத்தை சமர்ப்பித்து வாக்காளராக சேர்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இது தமிழக விரோத நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.