“தப்பு செய்து தொடங்கி வைத்தது திமுக தான்...” - பாஜக கூட்டணி குறித்த செல்லூர் ராஜூ கருத்தால் சலசலப்பு

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
2 min read

மதுரை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறிப்பிடும்போது, ‘‘நாங்கள் ஏதோ புதுசா போய் தப்பு பண்ணுனது மாதிரி... தப்பு செய்து தொடங்கி வைத்ததே திமுகதான்” என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ஆண்களில் எத்தனையோ பேர் வயதானவர்கள், பாவப்பட்ட ஆண்களாக இருக்க மாட்டார்களா? அதனால்தான், நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவசம் என்று வாக்குறுதியில் சொல்லியிருக்கிறோம். எல்லோராலும் பணம் கொடுத்து பேருந்துகளில் செல்ல முடியாது. ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அதிமுக, அவர்களுக்காக பாடுபடுகிறது.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசியை ஜெயலலிதா கொடுத்தார். பணக்காரர்கள் கூட இலவச அரிசி வாங்கிச் செல்கிறார்கள். அதற்காக அவர்களை தடுக்க முடியுமா? அரிசி கேட்டு யார் வந்தால் என்ன, அவர்களும் அரிசி இல்லை என்றுதானே வருகிறார்கள், வாங்கிட்டுப் போகட்டும் என்ற அடிப்படையிலே விலையில்லா அரிசி கொடுத்தோம்.

அதுபோல், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றையும் பாகுபாடு, தகுதி பார்த்து கொடுக்கவில்லை. எல்லோருக்கும் கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் அனைவருக்கும் என்று அறிவித்துவிட்டு, தற்போது தகுதி பார்த்து கொடுக்கிறார்கள்.

தற்போது அதிமுக வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து திமுக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன், திமுகவினர் கொதித்துபோய்விட்டார்கள். திராவிட இயக்கமான நீங்கள் போய் அவர்களுடன் சேரலமா என்று கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் ஏதோ புதுசா போய் தப்பு பண்ணுனது மாதிரி. தப்பு செய்து தொடங்கி வைத்தது நீங்கள்தான். பாஜக கூட்டணி ஆட்சியில் இவர்கள் இருந்தார்கள்.

அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் தற்போது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டணி பலத்தை நம்பி அதிமுக எப்போதுமே நின்றது கிடையாது. மக்களை தான் நம்பி நிற்போம். 1980-ம் ஆண்டு எம்ஜிஆர், பழநெடுமாறன் போன்றோருடன் தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர், 1977-ஐ காட்டிலும் அதிக ‘சீட்’கள் பெற்றார். எம்ஜிஆர் ஆரம்பித்த ஆட்சிதானே இன்னும் இருகிறது. இப்போது முன்பை விட அதிமுக வளர்ந்துள்ளது. அன்று 17 லட்சம் தொணடர்கள் இருந்தார்கள். ஜெயலலிதா, அதனை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றினார். தற்போது பழனிசாமி 2 கோடிக்கு மேலான தொண்டர்களை கொண்ட இயக்கமாக அதிமுகவை மாற்றியுள்ளார். இப்படி விரிந்து பரந்து இருக்கிறது அதிமுக. தமிழகத்திலே பெரிய கட்சி அதிமுகதான்.

திமுக எம்எல்ஏ-க்கள் பரிசுகளை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் அண்ணா நகரில் திமுக எம்எல்ஏ ஒருவர் சீர்வரிசை கொடுக்கிற மாதிரி மக்களுக்கு பரிசுகளை கொடுக்கிறார். மக்களுக்கு நல்லது செய்திருந்தால் இவ்வளவு பரிசு பொருட்களை கொடுக்க வேண்டுமா?

நான் சாதாரண கவுன்சிலராக இருந்தேன். பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். தோல்வியடைந்தேன். மேயர் தேர்தலில் தோல்வியடைந்தேன். இப்படி ஊருக்கும் உறவுக்கும் தெரிந்த என்னை, ஜெயலலிதா மேற்கு தொகுதியில் வெற்றிப்பெற செய்து எம்எல்ஏ, அமைச்சராக்கி உலகறிய செய்துள்ளார்கள். மீண்டும் அதே மேற்கு தொகுதி மக்களை நம்பி நிற்கப்போகிறேன். அதற்காக நான்தான் இந்த தொகுதியில் ‘சீட்’ கொடுப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. மாவட்ட செயலாளர் என்ற முறையில் 4 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளேன். பொதுச் செயலாளர் பழனிசாமி பார்த்து எந்த தொகுதியில் நிற்க சொல்கிறாரோ, அங்கு நிற்பேன்’’ என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
‘‘ஷாருக்கான் தான் இன்றும் பாலிவுட் பாட்ஷா’’ - ஏ.ஆர்.ரஹ்மான் கருத்துக்கு தஸ்லிமா நஸ்ரின் பதிலடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in