மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை பெறவிடக்கூடாது: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை பெறவிடக்கூடாது: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: ‘மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை கர்நாடக அரசு பெறவிடக்கூடாது’ என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சந்தித்து ‘மேகேதாட்டு அணை திட்டத்துக்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளதோடு, மத்திய அரசு விரைவில் அனுமதியளிக்கும் என்று உறுதிபட பேசி இருப்பது ஆணவத்தின் உச்சமாகும்.

ஏற்கெனவே தமிழகத்துக்குரிய காவிரி நீரை பெறுவதற்கே ஆண்டுதோறும் போராட வேண்டி யிருக்கும் நிலையில், மேலும் ஒரு அணை காவிரியின் குறுக்கே கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்.

கர்நாடக அரசு, தனது மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? தமிழக நலனுக்காக அதே உறுதியையும் வேகத்தையும் தவெக அரசு காட்ட வேண்டாமா? இது டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி, எதிர்கால தலைமுறைகளின் நீர் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய உரிமை பிரச்சினையாகும்.

எக்காரணம் கொண்டும், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைகட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்கக் கூடாது; மத்திய அரசின் அனுமதியைப் பெறவும் விடக்கூடாது.

அதற்கு தேவையான சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தவெக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in