

சீமான்
தமிழகத்தில் பாஜக வேரூன்ற திமுக தான் காரணம், மத்தியில் பிரதமராக இருந்த வாஜ்பாயை நிலையான ஆட்சி கொடுக்க வைத்த கட்சி திமுக என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்தது பற்றி எனக்குத் தெரியாது. பாதுகாப்பு குறைபாடு என்று கூறுகின்றனர். களத்தில் நின்ற விஜய்க்கு தான் அது பற்றி தெரியும். நான் காவல்துறையிடம் பாதுகாப்பே கேட்பதில்லை. அதை எதிர்பார்ப்பதும் இல்லை.
அதனால் எனக்கு அந்த பிரச்சினை இல்லை. என்னை பாஜகவின் பி-டீம் என்கின்றனர் திமுகவினர். ஆனால் பாஜகவின் ஏ-டீமே திமுகதான். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் வாக்குகளை தக்க வைப்பதற்காக, வருபவன் போகிறவனை எல்லாம், பி-டீம் என்று கூறுகின்றனர்.
தமிழகத்தில் முதன்முதலாக பாஜக ஆழமாக வேரூன்ற காரணமாக இருந்த கட்சி யார்? பாஜக நிர்வாகி எச்.ராஜாவை முதன்முதலில் சட்டப்பேரவைக்கு அழைத்து சென்றது யார்? மத்தியில் பிரதமராக இருந்த வாஜ்பாயை 5 ஆண்டு காலம் நிலையான ஆட்சி கொடுக்க வைத்த கட்சி எது? எல்லாமே திமுகதானே.
எங்கள் கட்சியில் 90 சதவீத மக்கள் இந்துக்கள் தான் என்று திமுக கூறுகிறது. பாஜகவுக்கு அடுத்ததாக 90 சதவீத இந்துக்களுடன் இருக்கும் திமுக, பாஜகவின் ஏ-டீமாகத்தானே இருக்க முடியும்.
திராவிடக் கட்சிகள் அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. அதன் பெயர் இலவச அறிவிப்பு. நான் ரூ.2000 கொடுக்கிறேன், ரூ.2500 கொடுக்கிறேன் என்கிறார்கள். ஒருவர் மூன்று சிலிண்டர் என்கிறார். இன்னொருவர் 6 சிலிண்டர் என்கிறார். எங்கிருந்து கொடுப்பார்கள்?
ஏன் என் மக்களை இப்படி ஏமாற்றுகிறார்கள்? இதையெல்லாம் கொடுத்தால் காவல்துறை, அரசு மருத்துவர், செவிலியருக்கு கொடுக்க சம்பளம் இருக்காது. சொந்த நாட்டுக்கு கடனை வைத்துவிட்டு செல்பவன் நல்ல தலைவனாக இருக்க முடியாது. அதேபோல் மதுவை திறந்து விட்டு விட்டு சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் பேசுவதும் வீண்.இவ்வாறு அவர் கூறினார்.