

நான் மக்களிடம் இருந்து திரள் நிதி வாங்கி கட்சி நடத்துகிறேன். நீங்கள் திருட்டு நிதி வாங்குகிறீர்கள் என்று திமுகவை நாதக தலைவர் சீமான் கடுமையாக சாடினார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட சீமான் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.8,000 டோக்கனுக்கு இழந்த மானத்தையோ, வெட்டி விற்கப்பட்ட மலையையோ, மணலையோ, மது குடித்து இறந்தோரின் உயிரையோ வாங்க முடியுமா?
தமிழர்களின் மானத்தை ஏன் ஏலம் விடுகிறீர்கள். படித்துவிட்டு வேலை இல்லாதவனுக்கு ரூ.4,000 ஏன் கொடுக்க வேண்டும். வேலைதானே கொடுக்க வேண்டும்? மதுக்கடையை மூடுவேன் என்று ஒருவர் கூட வாக்குறுதி கொடுக்கவில்லை. மக்களை குடிக்க வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் ஆட்சி நடத்துவது கொடுமையானது.
ஏற்கெனவே ரூ.10.50 லட்சம் கோடி கடன் இருக்கிறது. மீண்டும் அறிவித்த இலவசத்தை கொடுக்க, மறுபடியும் பல லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கி அதை வளர்ச்சி என்று காட்டுகின்றனர். கடன் வாங்குவது நம் இனத்தை அடமானம் வைப்பதற்கு சமம். வெள்ளம் வந்தால் அதற்கு நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. அது ஏற்படாமல் தடுக்க வேண்டும். இலவசம் வாங்குவதை மக்கள் தன்மான இழப்பாக பார்க்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர், வேட்டி, சேலை வாங்கக்கூட முடியாதவர்கள் எனது இன மக்களா? இரண்டு கோடி மக்கள் குடி நோயாளிகளாக உள்ளனர்.
அதிகபட்சம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு ரூ.10 லட்சத்தை கொடுத்து மது குடிப்பதை அங்கீகரிக்கின்றனர். 13 தலைமுறைக்கு ஒரு முறை மரபணு மாறிவிடும். நம் மரபணு மாறிவிட்டது. அதை வரலாறு தான் மீட்டெடுக்க முடியும். ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் வரி கூடிவிட்டது. பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது; தற்சார்பு நிலையை ஏன் கொடுக்க முடியவில்லை ?
இலவசத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கையேந்த வைத்துவிட்டனர். எங்களுக்கு சாதி, மதம் வேண்டும் என்று நினைப்போர், அவர்களிடம் செல்லுங்கள். மனிதநேயம் வேண்டும் நினைப்போர், எங்களிடம் வாருங்கள். மது குடிப்போர் வாக்கு எனக்கு வேண்டாம்; நல்ல குடிமக்கள் வாக்கு மட்டும் போதும். மது பழக்கத்தால் தமிழ் மக்கள் உழைக்கும் திறன் அற்றவர்களாக மாறிவிட்டனர். இதனால் வடமாநிலத்தவரை வரவழைத்து வேலை கொடுக்கின்றனர். தற்போது எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை கொடுத்துள்ளனர். அடுத்ததாக ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்து விடுவர்.
டாஸ்மாக் வருமானம் ரூ.50,000 கோடி மூலம் ஆட்சி நடத்துகிறீர்கள்.பயத்தினால் மு.க.ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். திமுகவிடம் நேர்மை துளிஅளவும் இல்லை. நான் திருட்டு நிதியில் கட்சி நடத்தவில்லை; மக்களிடம் திரள் நிதி வாங்கி கட்சி நடத்துகிறேன். திமுகவினர் திருட்டு நிதி வாங்குகின்றனர்.
ராமதாஸ், சசிகலா ஆகியோர் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. அவர்களை சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன். திருமாவளவன் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல. இலவசத்தை ஏன் நீதிமன்றம் தடுக்கவில்லை? பணநாயகத்தால் ஜனநாயக படுகொலை நடக்கிறது. இது முதலாளிகளுக்கான தேர்தலாக இருக்கிறது. இதில் எப்படி மக்களாட்சி மலரும். நான் கர்ப்பத்தில் இருக்கும்போதே எதிரியை தீர்மானித்துவிட்டு தான் வெளியே வந்தேன். யாரை வீழ்த்த வேண்டும் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.