

என்னையும், தவெக தலைவர் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது விசிக தலைவர் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்ததாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை திருவேற்காட்டில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தமிழ் மன்னர்களின் பெயர்களை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நீக்கினார், தற்போது ‘தமிழ்நாடு’ என்ற பெயரையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்குகிறார்’ என குற்றம்சாட்டி கண்டனத் தீர்மானம் உட்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு' பெயர் முழுமையாக இருக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு முறை கட்டாயம். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, அதை மீண்டும் ஆதித்தொல்குடி மக்களுக்கே வழங்கவேண்டும், பரந்தூர் விமான நிலையம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டமிடப்படாத எஸ்ஐஆர் பணிகளால் ஒரு கோடி வாக்குகள் பறிப்பு என குற்றம்சாட்டி அதற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: மக்களின் குறைகளை கேட்டு செல்ல நாங்கள் வரவில்லை. குறைகளை தீர்க்க வந்தவர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் பிரச்சினை, அதற்கு இதுதான் தீர்வு என சொல்லித்தான் தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் எங்களை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் இந்த முறை நிச்சயம் மக்கள் கவனிப்பார்கள். அதற்கேற்ப பிரச்சினைகளை படம் போட்டு காட்டும் வகையில் ஒரு திட்டத்தையும் வைத்திருக்கிறோம். எங்களுக்கு 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே இலக்கு. அடுத்து பிப்.21-ல் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளோம்.
ராமசாமி என்பவர் தான் பெரியார் என்று கூறுபவர்கள் ஒருபக்கம். என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் பெரியார் என்று சொல்வோர் என் பக்கம். என் மொழி, இனம் காக்க போராடி உயிர்நீத்த ஒவ்வொருவரும் பெரியார் தான். ஏற்காடு மலையில் ஏறிப்போகும் இடத்தில் அதியமான் வளைவு என்ற பெயரை அழித்து பெரியார் வளைவு என்று மாற்றியுள்ளனர். அதியமானை விட பெரியார் பெரியவரா? அதற்கு தான் ‘பெரியாரை போற்றுவோம்’ என்ற மாநாட்டை ஜன.3-ம் தேதி நடத்தவுள்ளோம்.
விஜய்யையும், என்னையும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஏனென்றால் பாஜக எங்களை பெற்றெடுக்கும் போது அருகில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவன் தான். அண்ணன் தானே பேசுகிறார், பேசிவிட்டு போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‘ராமசாமியை பெரியார் என்று சொல்வோர் ஓட்டு வேண்டாம்’ - பொதுக்குழு கூட்டத்தில் சீமான் பேசுகையில், “அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்றோரை பார்த்து அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல. திராவிடர்கள் ஒரு பக்கம், தமிழர்கள் ஒரு பக்கம். களத்தில் விளையாடும் போதுதான் யார் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது என்பது தெரியவரும். யார் மக்களுக்கானவர்கள் என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும். ராமசாமியை பெரியார் என்பவர்கள், திராவிடர்கள் என்பவர்கள் ஒருத்தர் கூட எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். இனத்தின் முன்னோர்கள் தான் பெரியார் என்றும், நாம் அனைவரும் தமிழர்கள் என்றும் எண்ணுபவர்கள் எனக்கு வாக்கு செலுத்தினால் போதும்” என்று தெரிவித்தார்.