

தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிஹார், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில் தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக, அதுவும் தேசிய கால அட்டவணையின் முதல் கட்டத்திலேயே நடத்தப்படுகின்றன.
இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மிக நீண்ட காலத்துக்கு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் நீண்ட கால பாதுகாப்பில் எங்களுக்கு போதிய நம்பிக்கை இல்லை. பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்ட போதிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இருக்கலாம் என்ற கவலை நீடிக்கிறது.
எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் காலத்தை குறைக்க தேசிய தேர்தல் அட்டவணையின் இறுதிக் கட்டத்தில் தேர்தலை நடத்தவேண்டும். அதேபோல் தேர்தல் அறிவிப்பு மற்றும் வாக்குப்பதிவுக்கு இடைப்பட்ட கால அவகாசமும் (20 நாட்கள்) போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் 40 நாட்களாவது பிரச்சார காலமாக வழங்க வேண்டும்.
சாமானிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை வாக்காளர்களுக்கு தெளிவாகதெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிப்பது அவசியமாகும். இந்தியத் தேர்தல் ஆணையம் இவற்றை பரிசீலித்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சமமான வாய்ப்பை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.