

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.31 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளின்போது சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டம் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-ன் கீழ் (முந்தைய சட்டப்படி பிரிவு 144) மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவுநாள்/பிறந்தநாள் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வுகளின்போது அதிகளவில் தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வருவதால் வழித்தடங்களில் இடையூறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்.9 முதல் 15 வரையும் அக்.9 அன்றும், அக்.25 முதல் 31 வரையும் மேற்கண்ட தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தொண்டர்களை ஏற்றிக்கொண்டு பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வகையான வாடகை மற்றும் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், தற்காலிக சிறப்பு அனுமதிபெற்ற வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் நுழைவது தடை செய்யப்படுகிறது.
மேலும் செப்.5. முதல் இரண்டு மாத காலத்துக்கு முன் அனுமதியின்றி 5 நபர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துதல் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளின்போது ஜோதி எடுத்துச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் மட்டும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுடன் ஜோதி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
செப்.9 அன்று இமானுவேல் சேகரன் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஜோதி ஓட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்வோர் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் தொடர்புடைய ஆவணங்களைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நினைவு நாள், குருபூஜை நிகழ்வுகளை அமைதியான முறையில் நடத்தி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.