

சென்னை: சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளை அரசு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் நூற்றாண்டை கடந்து இன்றும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக மீனம்பாக்கம் விமான நிலையம் இடநெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இதன் காரணமாகப் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்குக் கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அதற்காக 90 சதவீதம் வரை நிலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பரந்தூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பதவியேற்றார். இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு கைவிடப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதேவேளையில் சென்னையில் 2-வது புதிய விமான நிலையம் அமைக்கும் இடங்களைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (டிட்கோ) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல் கட்டமாக ஆய்வு செய்து செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அந்த இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில்தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த வான்வெளி பரப்பு தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் வருகிறது. இதுமட்டுமின்றி, கல்பாக்கத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அந்த வான்வெளி பரப்பு இருக்கிறது. எனவே அனுமதி கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. மேலும் சென்னையில் இருந்து செய்யூர் 100 கி.மீ. தூரத்தில் இருப்பதால் பயணிகளுக்குப் போக்குவரத்து சிரமங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளது. இதன் அருகில் பழவேற்காடு பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலம் இருக்கிறது. எனவே, பெரிய அளவில் நிலம் கிடைப்பது இங்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகள் ஆகியற்றுக்குப் பின்னரே திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெருமளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், புதிய விமான நிலையத்துக்காக எவ்வளவு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். எத்தனை நீர்நிலைகள் பாதிக்கப்படும் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது இருக்கும் அதே அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொண்டே இத்திட்டத்தைக் கொண்டு செல்வதுதான் தவெக அரசுக்கு இருக்கும் சவாலாகும்.
அதேபோல், விமான நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வர 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என டிட்கோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 இடங்களில் ஒன்று தேர்தெடுக்கப்பட்டாலும், அந்த மாவட்டத்தின் வளர்ச்சி பன்மடங்கு பெருகும். விமான நிலையத்தைச் சார்ந்த உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அதிகரிக்கக் கூடும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகும். நிலங்களின் மதிப்பு உயர்வதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.