

நெல்லை முபாரக் | கோப்புப் படம்.
திருநெல்வேலி: தமிழக சட்டப்பேரவையில் தங்கள் கட்சி சார்பில் உறுப்பினர் கணக்கை தொடங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பணிகளை மேற்கொண்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இருந்தது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் அந்த கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி வெளியேறியது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இதுவரை கூட்டணி குறித்த முடிவை அக்கட்சி எடுக்கவில்லை.
இந்நிலையில் திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான பாக முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சிக்கு 221 தொகுதிகளில் அமைப்புகள் உள்ளது. தற்போதைய தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் கணக்கை தொடங்கும் வகையில் பணிகளை செய்து வருகிறோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் தற்போதைக்கு இல்லை.
எஸ்டிபிஐ கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைவது குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு பிறகு முடிவெடுக்கப்படும். அகில இந்திய மாநாடு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
தாமிரபரணி நதியை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் சிறப்பு திட்டங்களை அறிவித்து நதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை அமைத்ததற்கும், காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மிகப்பெரிய குளறுபடிகளுடன் எஸ்ஐஆர் பணிகள் நடந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருக்கும் பிழையை சரி செய்ய மக்களை ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர். 12 லட்சம் வாக்காளர்களை சந்தேக வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இருக்கும் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் ஆயிரம் பேரின் பெயர்கள் நிரந்தர இடம் மாற்றம் என்ற அடிப்படையில் நீக்கி உள்ளது சரியானது அல்ல. அங்கு நடைபெறும் சிறப்பு முகாமுக்கு தங்கள் பெயர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள முயலும் நிலையில் அதிகாரிகள் அங்கு செல்லாததும் சரியானது அல்ல. அங்கு முகாம் நடத்தி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்.
சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் கல்வி இதனால் தடையாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.