

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: “தமிழகத்தில் பாஜகவின் மத அரசியல் எடுபடாது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும்” என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி சார்பில் தொகுதி நிர்வாகிகள் மாநாடு இன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. இதற்கு மகளிரணி மாநிலத் தலைவர் பாத்திமா கனி தலைமை வகித்தார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் நம் வாக்கு என்ற முழக்கத்துடன் 150 சட்டமன்றத் தொகுதிகளின் மகளிரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில் ‘களத்தை தயார் செய்வோம், 2026-ல் வெல்வோம்’ என்ற இலக்கை எட்டவுள்ளோம். இம்முறை தமிழகத்திலிருந்து சட்டப்பேரவையில் எங்களது குரல் ஒலிக்கும்.
பிஹார் பாட்னாவில் அரசுப் பணி நியமன ஆணை பெற வந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை விலக்கி பார்த்த முதல்வர் நிதிஷ் குமாரின் செயலை இம்மாநாடு கண்டிக்கிறது.
தமிழகத்தில் 7 கோடி வாக்காளர்களில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு வாக்காளர் நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எஸ்ஐஆரை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும், சமூக நீதி பேசும் தமிழக அரசு பெண்கள் நலன் கருதி தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிஹார், கர்நாடகாவில் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தை கணக்கிலெடுத்து ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்தோடு விடுமுறை அளிக்கிறது. அதேபோல், தமிழக அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முபாரக்
கீழடியில் அகழாய்வு மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையை மத்திய அரசை முழுவதுமாக ஏற்று வெளியிட வேண்டும்.
தேர்தல் முடிவுகளை ஜனவரி மாதத்தில் கூடும் எங்களது கட்சி பொதுக்குழுவில் முடிவெடுப்போம். இந்திய தலைவர்கள் முன்னிலையில் சிறப்பான தீர்மானத்தை முன்னெடுப்போம். அதில் யாரோடு கூட்டணி என்பதை முடிவெடுப்போம். நாங்கள் சேரும் கூட்டணி வெற்றி பெறும். முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
தீயசக்தி என்றால் இந்தியாவில் பாஜகதான். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது. தமிழகத்திலுள்ள ஏழரை கோடி மக்களும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். சமூக நீதியை நிலைநிறுத்தும் சிந்தனைகள் மக்களிடத்திலே இருக்கிறது. ஒருபோதும் பிஹார், குஜராத்தைப்போல் பாஜக நினைக்கும் மாற்றம் தமிழகத்தில் நிகழாது. தமிழக மக்களுக்கு கட்சிக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்போம். திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைகள் தொடர வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு கெடும் முயற்சிகளில் ஈடுபடுவோரை கண்டிக்கிறோம். தீபத்தூண் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆளுநர் வழியாக வந்தவர்கள் தற்போது நீதிமன்றம் வழியாக வர முயற்சிக்கின்றனர்.
மதுரை மண் மதநல்லிணக்க மண். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தப்பார்க்கிறார்கள். தமிழகத்தில் மத அரசியல் எடுபட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மத அடிப்படையில் செயல்படுபவர்கள் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. அது எடுபட்டதாகவும் தெரியவில்லை.
பாஜக குஜராத், உத்தரப் பிரதேசத்தைப் போல் மத அரசியல் செய்கின்றனர். இங்குள்ள மக்கள் மத நல்லிணக்கம், சமூக நீதி சூழலை உள்வாங்கிக்கொண்டு பேசுபவர்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள். மத அடிப்படையில் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். மக்களுக்காக செயல்படுபவர்களை மக்கள் அறிந்துகொள்வார்கள்” என்று அவர் கூறினார்.