

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் புகார் கொடுக்கலாம் என்று காவல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக பி.டி.அரசகுமார் பேரில் சென்னை தியாகராய நகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். புகாருக்கு உள்ளான திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவரான பி.டி.அரசகுமாரை கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். இவரது பின்னணியில் முன்னாள் எம்எல்ஏ உட்பட மேலும் சிலர் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் எம்எல்ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளியின் தர உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி போன்றவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்தும், சாட்சியங்களை சேகரித்தும் புலன் விசாரணை நடக்கிறது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது அங்கு செயல்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையை அணுகலாம். புகார் கொடுப்பவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.