

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தற்போதைய முதல்வர் விஜய் பங்கேற்ற தவெக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.
ஆனால், அரசுப் பணி ஆணை வழங்குவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், சீனி அகமது உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசு ஆணையை ரத்து செய்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, அரசுப் பணி ஆணை ரத்தால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார், ஆனந்த ஜோதி, உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர், ‘‘தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? மேலும், நீதிமன்றம் தாமாக எவ்வாறு ரத்து செய்ய முடியும்? ஒரு பொதுநல மனு மூலம் அரசின் பணி ஆணையை எவ்வாறு ரத்து செய்ய முடியும்?’’ என்று கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலன், ‘‘கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் கரூர் நெரிசலில் சிக்கியவர்களுக்கு அரசு பணி வழங்கியதில் பின்பற்றப்படவில்லை.
அதனால்தான் உயர் நீதிமன்றம் பணி ஆணையை ரத்து செய்தது. மேலும், சம்பவத்துக்குக் காரணமான கட்சியே தற்போது ஆட்சியில் இருப்பதால், வேலை வழங்கும் முடிவு என்பது ‘நலன்’ என்ற வரையறைக்குள் வராது’’ என்று வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்து விட்டனர். அது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். அப்படி இருக்கையில் அரசு அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு அரசு வேலை வழங்குகிறது என்ற பட்சத்தில், அந்த வேலையை வழங்கக் கூடாது என கூறுவதற்கு நீங்கள் யார்? ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்க்கும் நபராக இருக்கலாம். அவர்தான் குடும்பத்தை வழி நடத்துபவராக இருக்கலாம்.
அவ்வாறான ஒருவர் இதுபோன்று சம்பவத்தில் உயிரிழந்திருந்தால் அவருக்கு வேலை வழங்கக் கூடாது என்று கூறுகிறீர்களா? இந்த விவகாரத்தில் தயவுசெய்து நீங்கள் அரசியலைப் புகுத்த வேண்டாம்’’ என நீதிபதிகள் எதிர் மனுதாரர்களிடம் தெரிவித்தனர்.
அதன்பின்னர், ‘‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசு ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.