

புதுடெல்லி/ சென்னை: காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் வகையில் கூடுதல் கலந்தாய்வை 3 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு காலியாக இருந்த 153 உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைத்ததில் 40 இடங்கள் நிரம்பாமல் இருந்ததால், கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்து அந்த இடங்களை முழுவதுமாக மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய அளவில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான காலி இடங்களை நிரப்ப, தகுதி கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை 50-ல் இருந்து 30 ஆக குறைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 40 உயர் சிறப்பு மருத்துவப்படிப்புக்கான இடங்களை உடனே தமிழகத்திடம் திருப்பி அளிக்க வேண்டும். குறைக்கப்பட்ட புதிய கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான கூடுதல் கலந்தாய்வை 3 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
முந்தைய கலந்தாய்வில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்தவர்கள் இந்த கூடுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு, வேறு பிரிவை தேர்வு செய்து தரம் உயர்த்திக்கொள்ள (அப்கிரடேஷன்) தமிழகத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.