

சென்னை: சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் இரு மோசடி வழக்குகளின் கீழ், கடந்த டிச.13 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சவுக்கு சங்கருக்கு இதய நோய் உள்ளிட்ட மருத்துவ ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25-ம் தேதி (இன்று) வரை 3 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் தரப்பிலும், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டும் வகையில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதால் சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, காவல்துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ராஜீவ்காந்தி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக யாரைப் பற்றியும் எந்த வீடியோவும் வெளியிடக் கூடாது என சவுக்கு சங்கருக்கும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு மற்றும் தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்குகளின் கோரிக்கை நிலைக்கத்தக்கதல்ல எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்தனர்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சவுக்கு சங்கரின் ஜாமீன் மார்ச் 25-ம் தேதி (இன்று)) முடிவடையும் நிலையில், அவர் சரணடையாவிட்டால் அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரினார்.
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் ஜாமீன் முடிவடைந்த பிறகும் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் போலீஸார் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.