

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரியும், ரத்து செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 15-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.
தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரை கைது செய்ததது.
இந்த வழக்கை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை மற்றும் மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வழங்கவும் ஏப். 6-ல் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் 9 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தூக்கு தண்டனை பெற்றவர்களில் ஸ்ரீதர், தாமஸ் தவிர்த்து எஞ்சிய பேரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மேல்முறையீடு மனுக்களை இதே அமர்வு விசாரிக்கட்டுமா? அல்லது அடுத்து வரும் அமர்வு விசாரிக்கட்டுமா? என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் முடிவு செய்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணை ஜூன் 15-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.