சாலையில் கிடந்த 20 பவுன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: நேர்மைக்கு குவியும் பாராட்டு

திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய போலீஸார்.

திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய போலீஸார்.

Updated on
1 min read

திருவாரூர்: சாலையில் கண்டெடுத்த 20 பவுன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த திருவாரூர் தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

இவர், திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவி முத்துலட்சுமி உட்பட 6 பேருடன் நேற்று முன்தினம் ரயிலில் புறப்பட்டு நேற்று திருவாரூர் வந்தார்.

ராதாகிருஷ்ணன் மகளுக்கு மார்ச் 8-ம் தேதி திருத்துறைப் பூண்டியில் திருமணம் நடைபெறவுள்ளதையொட்டி, அதற்காக வாங்கிய 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள்ஆகியவற்றை திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டில் கொடுத்துவைக்க முடிவு செய்து, அவற்றை தனி பையில் வைத்து எடுத்து வந்திருந்தனர்.

பின்னர், திருவாரூரில் இருந்து ஆலத்தம்பாடிக்கு ஆட்டோவில் அனைவரும் புறப்பட்டுள்ளனர். அப்போது, ஆட்டோவின் பின்புறம் வைத்திருந்த நகைப்பை சாலையில் விழுந்துள்ளது. ஆனால், இதை அவர்கள் கவனிக்கவில்லை.

இதனிடையே, விருப்பாச்சி நடப்பு சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர் துரை, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதில் நகைகள், வெள்ளிப் பொருட்கள் இருப்பதைக் கண்டார்.

இதுகுறித்து அவர் நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்தானமேரியிடம் நகைப் பையை ஒப்படைத்தார். இதனிடையே, நகை காணாமல் போனது குறித்து புகார் அளிக்க ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு போலீஸார் விசாரணை நடத்தி அவர்களிடம் நகைகளை ஒப்படைத்தனர்.

குவியும் பாராட்டு: நேர்மையுடன் செயல்பட்டு நகைப் பையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு, போலீஸார் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். வறுமையிலும் நேர்மையைக் கடைபிடித்த துரையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் துரைக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய போலீஸார்.</p></div>
ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in