

மயங்கி விழுந்த நகராட்சி ஆணையர் புஷ்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றும் தூய்மைப் பணியாளர்கள்.
கள்ளக்குறிச்சி: போராட்டக் களத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த நகராட்சி ஆணையரை, தூய்மைப் பணியாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 76 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை, மாத ஊதியம் 5-ம் தேதிக்குள் வழங்குவதில்லை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தது முதல் இதுவரை ஊதிய உயர்வு வழங்கவில்லை என்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டியும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் தேங்கியது. வீடுகளில் தேங்கிய குப்பையை பொதுமக்கள் சாலையோரங்களில் கொட்டி வருவதால் ஆங்காங்கே கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. குப்பையை கால்நடைகள், தெருநாய்கள் கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்களும் வியாபாரிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் நகராட்சி ஆணையர் புஷ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக ஆணையருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் உறுதி அளித்தார். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், உடனடியாக ஆணையரை மீட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆணையரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும், மனிதநேயத்துடன் செயல்பட்டு, ஆணையரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தூய்மைப் பணியாளர்களின் நடவடிக்கையை நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.