சென்னை: பெண் போலீஸாருக்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை கூடுதல் காவல் ஆணையர் ராதிகா இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக காவல் துறையில் 26,589 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையை பொறுத்தவரை 5,500-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் பணியில் உள்ளனர். இவர்கள், குடும்பம் மற்றும் காவல் துறை பணியை சம விகிதத்தில் சிறப்பாக கையாளும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீஸாருக்கு இரவு பணி வழங்கப்படமாட்டாது என சென்னை காவல் ஆணையர் அருண் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெண்கள் பணியாற்றும் இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆயுதப்படை -1 மற்றும் - 2 வளாகங்கள், மோட்டார் வாகனப்பிரிவு, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு அலுவலகம் உள்பட 43 இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இதன் இயக்கத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ராதிகா புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் பெண் காவல் துறையினர் பயன்பாட்டுக்காக இன்று காலை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, மோட்டார் வாகனப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணியாற்றி வரும் சுமார் 5,900 பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பயனடைய உள்ளனர்.
சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தில் 5 ரூபாய் காயின் போட்டால் போதும். தானாகவே நாப்கின் கையில் கிடைக்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் வனிதா (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு) ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), அன்வர் பாஷா ஆயுதப்படை-2 ஆகியோர் கலந்துகொண்டனர்.