

நாகர்கோவில் கிளைச் சிறைச்சாலை | உள்படம்: சபரிவர்மன்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன், வார்டன்கள் மற்றும் கைதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றதாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இறந்துபோனதாக கடந்த 13-ம் தேதி அதிகாலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறை வார்டன்கள் 3 பேர், கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் சிறையில் 40-க்கு 20 என்ற வடிவமைப்பில், 800 சதுரஅடி கொண்ட 10 அறைகள் உள்ளன. அறைக்கு 30 கைதிகள் வீதம், 300 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது.
சபரிவர்மனை கடந்த 9-ம் தேதி சிறையில் அடைத்தபோது, அவருடன் 21 கைதிகள் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்த சூழல் ஒத்துக்கொள்ளாமல் சபரிவர்மன் உணவு சாப்பிட மறுத்து வந்துள்ளார்.
12-ம் தேதி இரவில் தன்னை விடுவிக்குமாறு அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். வார்டன்களிடமும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அன்று நள்ளிரவிலும் அவர் தூங்காமல் சத்தமிட்டதால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக பிற கைதிகள் அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளனர். அங்கு வந்த வார்டன்கள் திருமலைநம்பி, ஜெகன், சிவகுமார்ஆகியோரும் அவரை தாக்கியுள்ளனர்.
அதிகாலை சுமார் 2.30 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சபரிவர்மன் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வார்டன்கள், ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அவரது உடலை கொண்டு சென்றுள்ளனர்.
சபரிவர்மன் கடும் மூச்சுத்திணறலுடன் போராடி உயிர் விட்டிருப்பது நுரையீரலில் இருந்த அடையாளங்களில் தெரியவந்துள்ளது.
உடலில் இருந்த 19 காயங்களில் கடுமையான ரத்தக்கட்டு இருந்தது. கழுத்தின் பின்பகுதியிலும், தலையின் மேல் பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டுள்ளார். கை, கால்கள் அழுத்தமாக கட்டப்பட்டதற்கான தழும்புகளும் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.
நாகர்கோவில் கிளைச் சிறையில் கடந்த 1996-ம் ஆண்டு பிரபல ரவுடி லிங்கம் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறைக்குள் புகுந்த கும்பல் அவரை கொலை செய்தது.
தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவத்துக்கு பின்னர், இதே சிறைக்குள் சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்மூலம், நாகர்கோவில் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
உடல் சோர்வு மற்றும் பலவீனமானவர்களை பெரும் குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளுடன் அடைப்பது, அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.