

சென்னை: சிடிசிஎல் நிறுவனத்தின் மாற்றம் மூலமாக நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் ‘க்ளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட்’ (CTCL) மற்றும் தூய்மை இயக்கம் செயல்பட்டு வந்தன.
நிர்வாக வசதிக்காக இவற்றை ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நகர்ப்புற கழிவுகள் கிராமப் புறங்களில் கொட்டப்படும் அபாயம் உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘நகர்ப்புற கழிவுகளை கிராமங்களில் கொட்ட திட்டமா?’ என்ற தலைப்பில் கடந்த செப்.25-ம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில், நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டமில்லை என்று ஊரக வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற கழிவுகளை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வது சிடிசிஎல் நிறுவனத்தின் நோக்கமல்ல.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தொழில்நுட்ப ஆதரவை சிடிசிஎல் வழங்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அறிவியல் முறையில் கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, குப்பைக் கிடங்கில்லா நிலை (Zero Waste to Landfill) என்ற நீண்டகால இலக்கை நோக்கி செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தனது எல்லைக்குள் உருவாகும் கழிவுகளை தரம் பிரித்தல், செயலாக்கம், மறுசுழற்சி மற்றும் வள மீட்பு மூலம் அறிவியல் முறையில் கையாளும். ஒரு உள்ளாட்சி அமைப்பில் இருந்து மற்றொரு பகுதிக்கு கழிவுகளை மாற்றுவது இதன் நோக்கமல்ல.
கழிவு செயலாக்க வசதிகள், உரம் தயாரித்தல் போன்ற திட்டங்களுக்கு சிடிசிஎல் தொழில்நுட்ப ஆதரவு வழங்கும். மேலும், திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு தயாரிப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.