

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கொருக்குப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: எஸ்ஐஆர் கணக்கெடுப்பின்படி தற்போது தமிழக வாக்காளர்கள் 5.30 கோடி தான். இவற்றில் தேர்தலின் போது 4.75 கோடி வாக்குகள் பதிவாகும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம். இதில் 2.50 கோடி வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறலாம். திமுக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தற்போது பலன்பெறும் பெண்கள் 1.30 கோடி உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 2 பேர் என்றால் கூட 2.60கோடி வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும் என அனைத்து தரப்பினரும் இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். அந்த பயத்தால்தான் பழனிசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருகிறார். திமுகவை எதிர்த்து பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என நேற்று முளைத்த காளான்கள் வெறி கொண்டு பேசுகின்றனர். திமுக என்பது பெரிய மலை போன்றது. மலையைப் பார்த்து யார் கத்தினாலும், மோதினாலும் சேதாரம் எதிரிக்குத்தான்.
தொண்டர்கள் கவனம் இனி ஒரு மாதத்துக்கு, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அதிமுக, பாஜகவினர் போலியாக சேர்த்துள்ளவர்கள் பெயர்களை கண்டறிந்து நீக்குவதிலும் தீவிரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.