

மாதிரி படம்
ஈரோடு: பெருந்துறை அருகே ஈங்கூரில் பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி, வருமான வரி கட்டாதது குறித்து வியாபாரியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூர் எல்லை மேடு பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் செல்வகுமார். இவர், கடந்த 6 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்தாமல் வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் விளக்கம் கேட்டும், செல்வக்குமார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, நேற்று முன் தினம் கோவையில் இருந்து வந்த ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு இணை இயக்குநர் அஸ்வத் பாஜி தலைமையில், செல்வக்குமாரின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, அதிகாரிகள் சோதனைக்காக வருவதை அறிந்த செல்வகுமார், உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, வருமானவரித் துறை உயரதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இப்பணத்தின் மூலாதாரம், ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து செல்வக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.