

முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் | கோப்புப் படம்
சென்னை: தனியர் பள்ளிகளிடம் ரூ.400 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்தாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கைதான நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு முத்துக்குமார் அக்டோபர் 29-ம் தேதி சரணடைந்தார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணை நடைபெற்று, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இன்று பகல் 1 மணி முதல் 16-ம் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, மீண்டும் நவம்பர் 16-ம் தேதி காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முத்துகுமாரிடம் விசாரணை செய்யும்போது, அவரது வழக்கறிஞர் கவனிக்கவும் அனுமதி அளித்தும், உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, இன்றுடன் முடிவடைந்த நீதிமன்றக் காவலை நவம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.