

சென்னை: ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் 2026-27 கல்வியாண்டில் இதுவரை 366 மாணவர்களுக்கு உதவித் தொகை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் கல்வி பயிலும் 84 மாணவர்களுக்கு ரூ.30.24 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான உதவித் தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை' என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதித் துறை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான தற்போதைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர்.
சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
மீதம் 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளிநாடு புறப்படும் முன் விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவுகிறது. இதற்காக, நடப்பு ஆண்டில் தேர்வான மாணவர்களுக்கு தாட்கோ (TAHDCO) மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையிலிருந்து தாட்கோவுக்கு ஈடுசெய்யப்படும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் முறை:
பல்கலைக்கழகக் கணக்குக்கு நேரடியாக மொத்த ரூ.36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம். விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்குக்கு விடுவிக்கப்படுகிறது.
அனைத்து உதவித் தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான உதவித் தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் குற்றச்சாட்டு:
முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? திமுக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூக நீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.