

விக்கிரமராஜா | கோப்புப் படம்
திருவாரூர்: சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்பட்ட கடைகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூரில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள 43-வது வணிகர் மாநாடு தமிழக வணிகர்களின் திருப்புமுனையாக அமையும். இந்த மாநாட்டுக்கு கால்கோள் விழா நாளை (இன்று) நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் வணிகர்களை பாதுகாக்கவும், சில்லறை வியாபாரிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தில் இருந்து காப்பது குறித்தும் வலியுறுத்தப்படும். கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு வாடகை விகிதம் குறைக்க வேண்டும். அடிமனை தொடர்பான குழப்பமான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையக்கூடிய அரசு, வணிகர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் அரசாக அமையும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் வியாபாரிகளை வழிப்பறியில் ஈடுபடும் அளவுக்கு செயல்படுகிறார்கள். அரிசி ஏற்றிவரும் வாகனங்களைக் கூட பிடிக்கிறார்கள்.
இதை கண்டித்து போராட்டம் அறிவித்தபோது, சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் செய்தது. தற்போது மீண்டும் அதே அத்துமீறல் தொடர்கிறது. எனவே, போராட்டம் தள்ளிவைக்கப்பட்டதே தவிர, ரத்து செய்யப்படவில்லை.
நாடுமுழுவதும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்பட்டகடைகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு தரவேண்டும். போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.