கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

கோவை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது, இந்திய அளவில் எல்லோர் மனதிலும் பெரிய தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இனி நல்ல ஆட்சி வரும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், தொடர்ந்து அதே நிலைமை நீடித்து வருகிறது. இது மிகவும் மோசமான ஒரு சட்டம் ஒழுங்கு. இவ்விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற அதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அரங்கேறிய பிறகு தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டங்கள் இது போன்ற தப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வந்து 2 மாதங்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சரால் பாரதிய நியாய சங்கீத் என்று சொல்லக்கூடிய முன்பு இருந்த ஐபிசி சட்டத்தில் மாற்றங்கள் செய்து கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பு இருந்த தமிழ்நாடு அரசாங்கம் இதை பின்பற்றாமல் ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளார்கள். அமித் ஷா கொண்டு வந்த பிஎன்எஸ் சட்டத்தில் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக உள்ளது. என்றார்.

கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
கோவை சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் ஆறுதல் - ரூ.7 லட்சம் நிதியுதவி அளிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in