

பெண் காவலர் ஜிஷா
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எலி மருந்து சாப்பிட்ட இளம்பெண்ணை துரிதமாக செயல்பட்டு, காப்பாற்றிய ஆர்பிஎஃப் பெண் காவலர் ஜிஷாவை ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் உயரதிகாரிகள் பாராட்டினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுசூதனரெட்டி தலைமையிலான ஆர்பிஎஃப் போலீஸார் திங்கள்கிழமை மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 11-வது நடைமேடையில் ஜிஷா என்ற பெண் காவலர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனியாக அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை மாறுபாடாக இருந்தது. இதை கண்ட ஜிஷா, அவரிடம் சென்று விசாரித்தார். அப்போது அந்த பெண், தனது சகோதரர் உயிரிழந்ததால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததால், எலி மருந்தை சாப்பிட்டதாக தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் ஜிஷா, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். அதன்படி, ஆர்பிஎஃப் ஆய்வாளர் மதுசூதனரெட்டிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அங்கிருந்த மற்ற தமிழக ரயில்வே காவலர்கள் உதவியுடன் அந்த பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி, மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சை பிறகு, நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆர்பிஎஃப் காவலர் ஜிஷா மற்றும் தமிழக ரயில்வே போலீஸாரின் துரித நடவடிக்கையால் அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. துரிதமாக செயல்பட்டு, பெண்ணின் உயிரை காப்பாற்றிய, பெண் காவலர் ஜிஷாவை ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் உயரதிகாரிகள் பாராட்டினர்.