திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
Updated on
1 min read

திருச்சி: திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் மகபூபாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரவுடியான இவர், நேற்று இரவு 11.30 மணியளவில் காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி விழுந்த அவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். திருச்சி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். போலீஸார், பாதுஷா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாதுஷா கொலை குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ரவுடி பாதுஷா இருசக்கர வாகனத்தில் சென்று தடுமறி விழுவதும், பின்னர் 3 பேர் அவரை வெட்டத் துரத்துவதுமான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பாதுஷாவுக்கும், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கூடா நட்பு இருந்ததாகவும், இதனால் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது.

ஆயினும் பாதுஷா அந்த பெண்ணிடம் மீண்டும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கொலை நடந்திருக்குமோ என்று சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ரவுடி கோஷ்டியில் ஏற்பட்ட மோதலா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
இந்தியாவில் குறையும் கருவுறுதல் விகிதம் - விவரிக்கும் மத்திய அரசின் அறிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in