“ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ஆளுநராக மாறிவிட்டார்” - அமைச்சர் கோவி.செழியன்

“ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ஆளுநராக மாறிவிட்டார்” - அமைச்சர் கோவி.செழியன்
Updated on
2 min read

கும்பகோணம்: திருவிடைமருதூர் பேரூராட்சியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான 6 கட்டிடங்களை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் பேரூராட்சியில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர ஜெயபால் வரவேற்றார். முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இதில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சமுதாயக் கூடம், பேரூராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்ட கூட்ட அரங்கம், சமுதாய கூடம், அங்கன்வாடி மையம் என ரூ.1.05 கோடி மதிப்பிலான 6 கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வி்த் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: 2026-ம் ஆண்டுத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வருவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கிறார்கள்; அந்தப் பயணம் தொடரும்.

மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை அடி பாதாளத்திற்குத் தள்ளிய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி ஆகிய சூழல்களுக்கு இடையே தான் திமுக அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற பிறகு, எந்த மாநில முதல்வரும் செய்யாத வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது முதல் பட்ஜெட்டை அறிவிக்கும் முன்பே பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், முதல்வரின் தன்முனைப்பு மற்றும் அக்கறையால், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என இரட்டை இலக்கை எட்டித் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிய முதல்வரின் செயலை இந்தியாவே உற்று நோக்குகிறது. தமிழக அரசு பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசே பாராட்டிய பிறகு, வேறு யாருடைய பாராட்டும் நமக்குத் தேவைப்படப் போவதில்லை.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநில வளர்ச்சிக்கு ஆளுநர்கள் துணை நிற்பார்கள்; சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்த அக்கறை காட்டுவார்கள், மத்திய அரசோடு பேசித் திட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பார்கள்.

ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். ஆளுநராக மாறிவிட்டார். திராவிட மாடல் அரசு எதைச் செய்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவது, காலம் தாழ்த்துவது, இந்த அரசால் எந்தப் பயனும் இல்லை எனத் திரித்துப் பேசுவது, தமிழைக் கொச்சைப் படுத்திச் சமஸ்கிருதத்தைத் தூக்கிப்பிடிப்பது போன்ற காரியங்களைச் செய்வதால்தான், ஆளுநரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்.

எந்த வகையிலும் தமிழகத்துக்குப் பயன்படாத ஆளுநர் தேவையில்லை என்ற நிலை விரைவில் வரட்டும். இதனால் தான் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, ஆளுநர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்வதில்லை. அவர் மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாகச் செயல்படுவதைத் தான் தமிழக அரசு கண்டிக்கிறது. இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

“ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ஆளுநராக மாறிவிட்டார்” - அமைச்சர் கோவி.செழியன்
லிபியாவில் 3 வயது குழந்தையுடன் குஜராத் தம்பதி கடத்தல்: ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in