

நயினார் நாகேந்திரன்
சென்னை: நதிநீர் இணைப்பு என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம். வறட்சியைப் போக்க தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் இதில் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற உன்னத திட்டம் உருவாக்கப்பட்டது. மகாநதி – கிருஷ்ணா, பெண்ணாறு – காவிரி – வைகை– தாமிரபரணி ஆகியவற்றை கன்னியாகுமரி நெய்யாற்றோடு இணைக்கவும், இமயமலை நதிகளான கங்கை – பிரம்மபுத்திராவை இணைத்து, கங்கை நதி குமரிமுனையைத் தொடவும் அன்றைய அரசு திட்டமிட்டது. இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் தனிக்குழுவும் அமைக்கப்பட்டது.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன், 'நவவாலா குழு' அமைக்கப்பட்டு, நதிநீர் இணைப்புக்கான அசைக்க முடியாத அஸ்திவாரம் போடப்பட்டது. வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் 12-வது ஆண்டாக பிரதமர் மோடி தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் தாமிரபரணி மட்டும்தான் வற்றாத ஜீவநதியாக உள்ளது. காவிரி உள்ளிட்ட முக்கிய நதிகளுக்கு நாம் அண்டை மாநிலங்களையே நம்பி வாழ வேண்டியுள்ளது. பாரதத்திலேயே தமிழகம்தான் நீர்வளம் மிகவும் குறைவான, ஆபத்தான நிலையில் உள்ள மாநிலமாக இருக்கிறது.
‘உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாக மாறும்’ என்ற ஐநா மன்றத்தின் ஆய்வுக் கருத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டுதான், தமிழகத்துக்கு சீரான நீர்வளம் கிடைக்க பிரதமர் மோடி தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே, நதிநீர் இணைப்பை அவசர மற்றும் அவசியத் தேவையாகக் கருதி, தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர்கள் நியமனம்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ‘தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்கவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்மற்றும் வயது வரம்பு தளர்வுவழங்கவும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.