காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு புத்துயிர் - ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு புத்துயிர் - ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றம்
Updated on
2 min read

சிவகங்கை: காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. எனினும், பட்ஜெட்டில் ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி.க்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு வர, அக்காலத்திலேயே புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர்.

கடந்த 1933-ல் புதுக்கோட்டை நிர்வாக அலுவலராக இருந்த டாட்டன் ஹாமின் முயற்சியால், மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கால்வாய் வெட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

கடந்த 1958-ம் ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு இத்திட்டம் ரூ.3,290 கோடியில் செயல்படுத்தப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனுாரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு, கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும்.

இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் 8.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ரூ.234 கோடியில் மாயனுார் கதவணை அமைக்கப்பட்டு, 2014ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பின்னர் கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப் போவதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கால்வாயை முதல்கட்டமாக மாயனூர் மதகு அணையிலிருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ.க்கும், 2-ம் கட்டமாக அங்கிருந்து வைகை ஆறு வரை 109 கி.மீ.,-க்கும், 3-ம் கட்டமாக அங்கிருந்து குண்டாறு வரை 34 கி.மீ.,-க்கும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இப்பணி கடந்த 2021 பிப்ரவரி 21ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் இடையே நிலம் கையகப்படுத்தப்பட்டு, சில கி.மீ.,-க்கு மட்டுமே கால்வாய் தோண்டப்பட்டது.

கடந்த திமுக அரசு இத்திட்டத்தில் அக்கறை காட்டாமல் படிப்படியாக நிதி ஒதுக்கீட்டை குறைந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்துக்கு தவெக அரசு புத்துயிர் கொடுத்துள்ளது. எனினும் இத்திட்டத்துக்கு ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுனன் கூறும்போது, “தென் மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டு திட்டமான காவிரி - வைகை - குண்டாறு திட்டத்துக்கு ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கியுள்ளனர். இந்த நிதி மூலம் 5 கி.மீ., கூட கால்வாய் வெட்ட முடியாது. கடந்த 2021-ம் ஆண்டே மாயனூர் கதவணையிலிருந்து 4.5 கி.மீ.,-க்கு கால்வாய் வெட்ட ரூ.165 கோடி செலவழித்தனர்.

முதல் கட்டமான மாயனூரிலிருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ.,-க்கே ரூ.6,900 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதுபோக 2 கட்டங்கள் உள்ளன. இதேபோல் நிதி ஒதுக்கினால், இத்திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 50 ஆண்டுகள் தேவைப்படும். முதல்வர் விஜய் இதில் தலையிட்டு ரூ.2,000 கோடியாவது ஒதுக்க வேண்டும்” என்று அர்ச்சுனன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு புத்துயிர் - ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றம்
“தவெக வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட பட்ஜெட்” - மாணிக்கம் தாகூர் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in