அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு

தமிழக அரசு தரப்பில் தகவல்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு
Updated on
1 min read

சென்னை: நகராட்சி நிர்வாக பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி நியமனங்களுக்கு ரூ.650 கோடி வரை லஞ்சம் வசூலித்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப்பதியக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமலாக்கத் துறை ஆதாரப்பூர்வமாக அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிய முகாந்திரம் இருப்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம்’ என உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை லஞ்ச ஒழிப்புத்துறை அமல் படுத்தவில்லை எனக்கூறி இன்பதுரை, உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பணி நியமனங்களுக்கு லஞ்சம் வசூலித்தவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிய வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு என்.ஆர்.இளங்கோ, ‘வழக்குப்பதிய அரசின் அனுமதி தேவை’ என பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசின் அனுமதி பெற வேண்டுமா?’ என்றனர். அதற்கு அவர், ‘நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அரசின் அனுமதி பெறவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என தெரிவித்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, ‘இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்த மனு விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும்’ என்று தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்.20-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in