மத்திய தொகுப்புக்கு போகும் 151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை எதிர்த்து சீராய்வு மனு: சிபிஎம் கோரிக்கை

 பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on
2 min read

சென்னை: “தமிழ்நாட்டின் 151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவத்துறை உயர்கல்வியில் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 151 உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி - டி.எம். / எம்.சி.ஹெச்) மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் 29.5.2026ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த இடங்கள் அனைத்தையும் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில், மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பில் நமது மாநிலம் செய்திருக்கக் கூடிய தொடர் சாதனைகள் மூலம் ஏற்பட்டிருக்கும் வசதியை, வாய்ப்பை கைநழுவ விடுவதற்கு சமமானது ஆகும்.

கடந்த முறை உச்சநீதிமன்ற தீர்ப்பில் “அரசு மருத்துவர் ஒருவர் உயர் சிறப்பு திறன்களை பெறுவதற்கு அனுமதித்தால் அவர் தனியார் மருத்துவரை விட பொது சுகாதாரத்துக்கு மிகவும் பயன்படுவார்” என்று கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், இந்தக் காலிப் பணியிடங்களை தகுதி தளர்வுடன் இன்னொரு சுற்று கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் இந்த இடங்களில் தமிழகத்தில் இருந்து அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் மூலம் அவற்றை நிரப்பி இருக்க முடியும்.

முன்னதாக, மொத்தம் 430 இடங்களில் பணி வழியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 214 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் கலந்தாய்வு முடிந்து 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு மீதம் 151 இடங்கள் தகுதியான நபர்கள் இல்லை என்று கூறி, அரசு மருத்துவர்களுக்கு அந்த இடங்கள் மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளால் தமிழகத்திற்கு உரிய இடங்களை இழப்பது தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய பிரச்சனையாகவும் இருக்கிறது.

ஏற்கெனவே, நீட் தேர்வு உள்பட பல்வேறு தடைகள் மூலமாக தமிழ்நாட்டினுடைய உயர் சிறப்பு சாதனைகளை மற்ற மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிற சூழலில் இந்த மாநிலத்துக்காக ஒதுக்கப்பட்ட உயர் மருத்துவ கல்வி இடங்களையும் இழப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

எனவே, மாநில அரசு சீராய்வு மனுவை உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திறமை மிக்க வழக்கறிஞர்கள் மூலம் இந்த உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அது மட்டுமல்லாமல், உயர் சிறப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்புகளுக்கு மத்திய அரசின் ஆணைகள் மூலமும், உச்ச நீதிமன்ற தலையீடுகள் மூலமும் மாற்றப்படுவதை கண்டித்து, அவை எல்லா சூழலிலும் மாநிலங்களின் உரிமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது இதுபோன்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவும்.

மேலும், உயர் சிறப்பு படிப்பில் தேர்ச்சி பெறும் மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப பணி நியமனம், பதவி உயர்வு வழங்குவது, தனியார் மருத்துவர்கள் 40 லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக செலுத்த வேண்டுமென்பதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> பெ.சண்முகம்</p></div>
மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா - ஓசூர் இளைஞர்கள் அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in